பெண்

தளை
-----
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர

பால்
----

என்னைத் தெய்வம் ஆக்கினாய்
சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-
உன்பால் வேறுபாடு அழுத்தமானது
சிவனுக்கு பசும்பாலும் சக்திக்குகள்ளிபாலும

விளம்பரம்
----------

குளிப்பாட்டி
அழுக்காக்குகிறான்
பெண்ணை
தொலைக்காட்சியில்!!!..

மனிதன்

இப்படியாக மனிதன்..
-------------------

இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்

இப்படியாக மனிதன்..

தொலைக்காட்சி
--------------

அடக்கம் செய்யப்படுகிறோம்...
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்

முரண்
------
இறைவனின் வாகனம் என்றான் நாயை

அவதாரம் என்றான் பன்றியை

இறைவனே என்றான் குரங்கை

இவனே திட்டினான் என்னை
~நாயே!பன்றியே!குரங்கே!



காலம்
------
உன் கையிலா கடிகாரம்?கடிகாரத்தின் கையில் நீ


கொலை
---------

ஒரு நாள்
வாழ்க்கை
பூவுக்கு!!...
விரியுமுன்பே
பறித்து
இறைவனுக்கு
அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு
வாழ்க்கை
வேண்டி
தனக்கு!!!!!!!!!!

சாவும் ஒரு வாழ்வே

ஏடா! தமிழ் வீரா! உனை
எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற
வலியின் துணை யோடே!
நாடா பிணைக் காடா என
நால்வர் மடிந்தாலும்
போடா அவர் வழியே! நகை
புரிவாள் தமிழ் மொழியே!

குண்டாந்தடி கொண்டே அடி
தந்தார் வெறியாளர்
என்றால் அது நன்றே! எமை
ஈன்றாள் புகழுண்டே!
பண்டை மொழி என்பார் தமிழ்
பார்ப்போம் அதை வீணர்
வென்றா விடுவார்கள்? மற
வேங்கை விடுவானோ?

'முத்தே! முழு நிலவே! விடை
மொழிவாய்!' என இல்லாள்
பத்தே விரல் பற்றி அவள்
பதிலின் வெறி பெற்று...
'சொத்தே! மொழி வித்தே! தமிழ்ச்
சொல்லே! உனக்காச்
செத்தே மடிகின்றேன்!' எனச்
செல்வாய் தமிழ் ஏறே!

போராளி

என்னை என் மண்ணில் புதைத்தாய் பகைவனே
என் மண்ணைஎங்கே புதைப்பாய்


செத்தவனுக்காக
அழுதவன்
நீ
இவன்
அழுதவனுக்காக
செத்தவன்!

இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்

சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!

**********************

ஞானம்
------

ஞானம் பெற்றது

நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்

சுடுகாடு
-------

ஊரில் உங்கள் சுடுகாடு.

சுடுகாட்டில் எங்கள் ஊர்.

இனவெறி
---------

மாடுகள் காணாமல்போகும் என்று
தோலில் குறிபோடும் எங்கள் மண்
கொஞ்சநாளாய்...
மனிதர்களையே காணவில்லையே.


மானம்
-------
கோவணம் அவிழ்க்கப்பட்டதா?அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு





நிமிர்வு
---------
தேவை பயில்வன்களல்ல வீரர்கள
உன் உடலின் கூனல் பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?

***************

மாடு
----
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வண்டி இழுக்கிறது
கொம்பைமறந்தமாடு

தீவிரவாதம்

துப்பாக்கி வைத்திருப்பனை தீவிரவாதி என்கிறான்
அனுகுண்டு வைத்திருப்பவன்


அப்பாவித் தமிழர்கள் மீது
பேரினவாத ராணுவம் நடத்திய
கொலைவெறித் தாக்குதலில்
ஐம்பது பேர் பலியானார்கள்
ஐந்நூறு பேர் புலியானார்கள்

தமிழா.. நீ பேசவது தமிழா

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

ஏழை - காசி அனந்தன்

வெறி
-----
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்...எரிந்தது அடுப்பல்ல-
சேரி

உறுத்தல்.
--------
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி
இழைத்த பனைப்பாய்...
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?

கண்ணோட்டம்
-------------
செருப்பைப்பார்கையில்
நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்பார்க்கிறீர்கள்.
நான் செய்;தவனின்
கையைப்பார்க்கிறேன

குப்பைத்தொட்டி
---------------
அலுவலகத்தில் இருக்கிறவனுக்கு
இது குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது அலுவலகம்.

கடற்கரை
---------
உடல் நலம் தேடி
காற்றுவாங்க வந்து போகும்
பெரிய இடத்து மாடிகள்
இங்கேயே நோயோடும்
நொடியோடும்
ஒடுங்கி கிடக்கும் மீனவர்
குடிசைகள

சாமி
----
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.

தேர்தல்
-------
மாலை வளையல் மூக்குத்தி
பொன்னான எதுவும் இல்லை
எங்கள் குடிசையில்.
அவன் சொல்கிறான்
இருக்கிறதாம் எங்களிடம்...
பொன்னான வாக்குகள

ஏழ்மை
------
சதை பிடித்து விடுகிறாள்
அழகு நிலையத்தில்
எலும்புக்கைகளால்


புரட்சி
------
'மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்!
குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்



திமிர்
----
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்